Tuesday, April 22, 2014

எங்கள் காஞ்சித் தலைவர் ---- Experiences of Shri Ranganathan Kothandaraman



Episode 1

என்னுரை

ஜய வருடத்தின் துவக்க நாளான இன்று, அனைவருக்கும் இனிய தமிழ்ப் 
புத்தாண்டு நல் வாழ்த்துக்களைச் சொல்லி என் எளிய முயற்சியைத் 
துவங்குகிறேன்.

என் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, காஞ்சி மகா பெரியவர் 
அவர்களுடன் எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘எங்கள் 
காஞ்சித் தலைவர்’ என்கிற தலைப்பில் தொடராய் எழுத முயல்கிறேன்.

விதிதா ந மயா விசதை ககலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் ||

அறிவின் எந்தக் கிளையையும் நான் அறிந்ததில்லை. செல்வம் எனச் 
சொல்லப்படும் எதுவும் என்னிடம் இல்லை.
குருவே! உங்கள் இயல்பான அருள் மழையை என் மீது பொழிந்து, 
அடைக்கலம் தந்து அருள்வீராக!

காஞ்சித் தலைவர் நினைத்தால்தானே இது நடக்கும்? அப்படி அவர் 
நினைத்தபின், அது இனிதாய் நிறைவேற அவரது திருவடிகளும், அருள் 
மழையும் வேண்டும். அதனால் அவரது பொற்பாதங்களைப் பற்றி, என் 
அன்னையின் ஆசிகளுடன், ஷீர்டி ஸாயி பாபா அவர்களின் நல்லாசிகளுடன் 
துவங்குகிறேன்.

-தொடரும்


Episode 2

என் தந்தை ஆங்கரை திரு. கோதண்டராமன் அவர்களுக்கும், என் தாயார் 
திருமதி. மீனா அவர்களுக்கும் 1958-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 30-ம் நாள் 
திருமணம் இனிதே நடந்தேறியது. அப்போது என் தந்தைக்கு வயது 19; 
தாயாருக்கு 17.

திருமணம் முடிந்து பத்து வருடங்களில் என் பாட்டனார் (தந்தையின் தந்தை) 
இயற்கை எய்தி விட, பெங்களூரில் சில வருடங்கள் கழிந்து விட, என் தந்தை 
உத்தியோகத்தில் மாற்றல் வாங்கிக் கொண்டு என் தாயார் / என் பாட்டியுடன் 
சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் குடி புகுந்தார். ஆண்டுகள் 
பத்து கடந்தாலும், என் தாயார் வயிற்றில் ‘புழு / பூச்சி’ இல்லை.

‘மழலைப் பாக்கியம் கிட்டவில்லையே, என்ன செய்வது?’ என்றறியாத 
நிலையில் இருந்த என் பெற்றோரிடம் ‘மாம்பலத்தில் வெங்கட்ராமன் 
பங்களாவில் பெரியவா இருக்கா, போய்ப் பாருங்கோ’ என்று அலுவலக 
நண்பர் கூறிய நேரம் எங்கள் குடும்பத்தின் பொன்னான நேரத் துவக்கம் 
என்றே கொள்ளலாம்.

வெங்கட்ராமன் பங்களாவில் கூட்டம் நெரிந்தது. ’யாரையும் தெரியாதே?’ 
என்று இவர்கள் தவிக்கையில், நம் காஞ்சி மகா பெரியவர் அனுப்பியது 
போலவே வந்தார் மணக்காலில் வசித்து வந்த, இப்போது பெரியவருடன் 
தங்கி விட்ட திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள்.

காஞ்சி மகா பெரியவர் அவர்களிடம் அறிமுகம் செய்துவிட்டு, தம்பதியனரது 
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உடனே நடமாடும் தெய்வம் புன்னகைத்துத் 
திராட்சை பழங்கள், விபூதி, குங்குமம் தந்து ஆசீர்வதித்தது. என் தாய் அடைந்த 
ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ’இந்தத் தம்பதியை ஆசீர்வதித்தது 
போதாது’ எனக் காஞ்சி மகா பெரியவர் அவர்களுக்குத் தோன்றியிருக்க 
வேண்டும்.


சில மணித்துளிகளுக்குப் பின்னர்….

பங்களாவில் ஏகாந்தமாய் இருந்த காஞ்சி மகா பெரியவர் அவர்களிடம் 
மீண்டும் மணக்கால் திரு. நாராயணசாமி ஐயர் என் பெற்றோரை அழைத்துச் 
சென்று விண்ணப்பித்தார். ’உங்கள் திருவடிகளே சரணம்’ எனச் 
சாஷ்டாங்கமாய் என் பெற்றோரும் ஜகத்குரு அவர்களை நமஸ்கரிக்க, 
மீண்டும் புன்னகை பூத்து, என் தாய் மனசு நிறையும்படி ஆசிகள் வழங்கிய 
காஞ்சித் தலைவரை என்னவென்று சொல்ல?

சரியாக ஒரு வருடம் கழித்து, 1968-ம் வருடம், மார்கழி மாதம், ரோகிணித் 
திருநாளில் நான் பிறந்ததே காஞ்சி மகா பெரியவர் அவர்களின் அளவற்ற 
கருணையினால்தானே?

என்னோடு நில்லாமல், 1971-ல் என் தங்கை, 1973-ல் என் தம்பி என எங்கள் 
குடும்பத்தில் மும்மாரி பெய்யச் செய்த காஞ்சி மகா பெரியவர் அவர்களின் 
அளவற்ற அருள் மழையை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா?

‘குழந்தை இல்லாத பிள்ளைக் கலி தீர்க்க வந்த’ என்னைக் கொண்டாடியதை 
விட ‘கலி தீர்த்த’ காஞ்சி மகா பெரியவர் அவர்களிடம் என் தந்தையாரின், 
தாயாரின் அபரிமிதமான பக்தி கூடிப் போனதும் நான் பிறந்த நாளில்தான்.
ஆனால் என் பெற்றோரால் முழுமையாகச் சந்தோஷப்பட முடிந்ததா?

-தொடரும்




Episode 3



வியாழக்கிழமை என்றழைக்கப்படுகிற குருவார நாளில் – நாம் வணங்கும் 


குருவுக்கான உகந்த நாள் அன்று அவருடைய லீலைகளையும், அருள் மழைத் 



துளியையும் கொஞ்சம் அநுபவிப்போமா?


பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் அழுது கொண்டேதான் பிறக்கின்றன.


‘பரம்பொருளான நாராயணனை அல்லும் பகலும் தரிசித்துக் கொண்டும்,


ரசித்துக் கொண்டும் இருந்தேனே, அது பறி போனதே!’ என்கிற ஆதங்கத்தில்


எழும் குரல்தான் ‘குவா! குவா!’ தொப்புள் கொடி அறுந்த பின், கலிகால


மாயையில் சிக்கிய பின், எல்லாவற்றையும் மறந்து குழந்தைச் சிரிப்பில்


பெற்றோர்களை மயக்கத் துவங்குகின்றன.


ஆனால், பிறந்த குழந்தை நாள் முழுதும் விடாமல் அழுதால்


பெற்றவர்களுக்கு எவ்வளவு வேதனையாயிருக்கும்? அதுவும் பத்து வருட


காலத்திற்குப் பின், காஞ்சித் தலைவரின் எல்லையற்ற கருணையில் உதித்த


தலைமகன் அழுது கொண்டேயிருப்பதைக் கண்டு மிகவும் வேதனை


அடைந்தனர்.


‘சரியாகி விடும்’ என்று நாட்களைக் கடத்தியதில், வருடம் ஒன்று கழிந்து


விட்டது. வேதனை தீர்க்க, ஞான வேந்தனை அல்லாது வேறு யாரால்


முடியும்?


காஞ்சிக்கு அருகில் உள்ள தேனம்பாக்கத்தில்


முகாமிட்டிருந்த காஞ்சி மகா பெரியவர் அவர்களைத் தரிசிக்க என் பெற்றோர்


என்னையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.


கிணற்றிற்கு அந்தப் பக்கம், மிகக் குறுகலான இடத்தில், உலகத்தைக் காக்கும்


நடமாடும் தெய்வம் தன் உடலை இன்னும் குறுக்கிக் கொண்டு, தன்னைக்


காண வரும் பக்தர்களுக்கு வஞ்சனையே இல்லாமல் அருளை வாரி வழங்கிக்


கொண்டிருந்தது.


கிணற்றிற்கு இந்தப் பக்கத்தில் என் பெற்றோர் தங்களது மனத் தாங்கலை


காஞ்சித் தலைவரிடம் முறையிட்டபோது, என்னைத் தூக்கிக் கிணற்றுப்


பலகையின் மேல் நிற்க வைக்குமாறு பணித்தார். என் தந்தை என்னைப்


பற்றிக் கொண்டு நிற்க வைத்த போது ‘பார்த்துப் ஜாக்கிரதையா புடிச்சிக்கோ!’


என்றார் ஜகத்குரு கரிசனத்துடன்.

‘பொறந்ததுலேந்து அழறானா? சிரிக்கவே இல்லையாக்கும்!’ என்று பெரியவர்


கேட்ட கேள்விக்கு என் தாயின் கண்ணீர்தான் பதிலாய்க் கிடைத்தது. உடனே


ஜகத்குரு செய்தது….இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.


காஞ்சி மஹா ஸ்வாமிகள் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் பக்தர்கள் கோடி


கோடியாய்க் காத்திருக்க, தவமிருக்க, அந்த நடமாடும் தெய்வம் என்னைத்


தலை முதல் கால் வரை மும்முறை முழுமையாய்ப் பார்த்து ‘பையன்


க்ஷேமமா இருப்பான். பத்திரமா இறக்கி கூட்டிண்டு போ!’ என்று


ஆசீர்வதித்ததை என்றும் மறக்கவே முடியாது.


‘அப்புறம் அழவேயில்லைதானே?’ என்று என் அம்மாவிடம் கேட்டேன்.


நெகிழ்ந்த குரலில் என் தாயார் ‘எங்களுக்கே ஆச்சரியம்தான். அழுகை உடனே


நின்னு போயி, மத்த குழந்தைகள் மாதிரி இருக்க ஆரம்பிச்சுட்டே!’ என்றாள்.


ஒன்றரை வயதில், காஞ்சி மகா பெரியவரின் திருஷ்டி என் மேல்


முழுமையாய் விழுந்தபின் கவலைப்பட என்ன இருக்கிறது? ‘அவனருளாலே


அவன் தாள் வணங்கி’ என்று மாணிக்க வாசகர் தொழுததைப் போல காஞ்சித்


தலைவரின் ஆசி பெற்று, அவரையே பற்றிக் கொண்டு, வாழ்க்கைக் கடலை


வெற்றிகரமாய்க் கடக்க முயன்று கொண்டிருக்கிறேன்.


தன் மீது எல்லையற்ற பக்தியைக் கொண்டிருந்த என் தந்தையார் மீது காஞ்சி


மகா பெரியவர் அவர்களின் அருட் பார்வை பதிந்தபோது, என் தந்தையாரின்


நிலைதான் எத்துணை மாறிப் போனது?


-தொடரும்





Episode 4

மூன்றாவது அத்தியாயம் முடித்து, பதிந்து விட்டு அம்மாவிடம் பேசினேன். 
‘அப்பா பத்தி எழுதறது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி உன்னுடைய 
விஷயமே பாக்கி இருக்கு’ என்றாள். அது….

காஞ்சி மகா பெரியவர் அவர்கள், என் தலை முதல் கால் வரை பார்வையால் 
வருடி, மூன்று முறை அருள் மழையை ஏன் பொழிய வேண்டும்? காரணம் 
இல்லாமலா செய்திருப்பார்? ஆனால், என்னைப் போன்ற, என் பெற்றோரைப் 
போன்ற எளிய மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் விளங்கி விடுமா என்ன?

அழுவதை நிறுத்திவிட்டு மற்ற குழந்தைகளைப் போல இருந்த என்னைத் 
திடீரென ‘அம்மை நோய்’ தாக்கியது. இவ்வகை நோய் இரண்டு வாரங்களுக்கு 
இருக்கும், மருந்துகள் கிடையா எனச் சாதாரணமாய் இருந்த என் 
பெற்றோருக்குச் சில நாட்களுக்குப் பின் அதிர்ச்சி ஏற்பட்டது.

அம்மை நோயின் பால் உள்ளே இறங்கி, உடல் கறுத்துப் போய், பேச்சு 
மூச்சற்றுக் கிடந்த என்னைப் பார்த்த பெற்றோர்களுக்குப் பயம். என் 
அம்மாவின் உணர்ச்சிகளைச் சொல்ல வார்த்தைகள் போதாது. அந்தக் 
காலத்தில் இந்த நோயை அவ்வளவு சீக்கிரம் வெளியில் சென்று 
மருத்துவரைக் காண்பித்துக் குணப்படுத்தி விட முடியாது. என்ன செய்ய?

என் பெற்றோருக்குக் காஞ்சித் தலைவரைத் தவிர வேறு யாரைத் தெரியும்? 
"பத்து வருடங்களாய்க் காக்க வைத்து, மழலை இன்பத்தை அருளி, 
அழுகையை அகற்றியது இப்படி பறிக்கத்தானா?" என்றெல்லாம் எழுந்த 
கேள்விகளை ஒதுக்கி வைத்து, ஜகத்குரு அவர்களை மனமுருகித் 
தியானித்துத் துதித்து விட்டு, அவரின் மேல் பாரத்தை இட்டு, என்னை 
மருத்துவரிடம் காட்ட முடிவு செய்துவிட்டனர்.

ஸம்ஸார ஸாகரம் வேண்டாம் என்றுதானே ஸ்வாமிநாதன் நமக்கெல்லாம் 
ஸ்வாமியாய் மாறினார்? அவரின் மீது நம் பாரத்தை ஏற்றிவிட்டு, நாம் 
‘ஹாயாக’ இருக்கலாமா? இருக்கலாம்தான். அதற்குத்தானே அந்த தெய்வம் 
‘நடமாடும் தெய்வ’மாய் உலகினில் நம்மைக் காக்கவே உதித்தது?
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற மருத்துவரான திரு 
சின்னசாமி அவர்களிடம் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
பேச்சு மூச்சில்லாமல் இருந்த என்னை அவரது வீட்டு வாயிலில் வைத்துக் 
காத்திருந்தார்கள்.

மருத்துவர் சின்னசாமி வந்து பார்வையிட்டுப் பதிலே சொல்லாது, ஒரு 
ஊசியைப் போட்டார். ‘இன்னும் சிறிது தாமதமாய் வந்திருந்தாலும் என்னால் 
காப்பாற்றியிருக்க முடியாது. அவ்வளவு தீவிரமாய் broncho pneumonia உங்கள் 
குழந்தையைத் தாக்கியிருக்கிறது. இனி பயமில்லை. கடவுளுக்கு நன்றி 
சொல்லுங்கள்’ என்று தெம்பளித்ததை அம்மா இன்றும் நெகிழ்ச்சியுடன் 
நினைவு கூர்ந்து ‘நீ பொறந்ததும், இன்னிக்கு நோய் நொடி இல்லாமல் நல்லா 
வாழறதும் பெரியவா போட்ட பிச்சைடா’ என்றாள். அதில் எள்ளளவும் 
சந்தேகமேயில்லைதான். இந்தப் பிச்சைக்குத் ஒவ்வொரு கணமும் அவரை 
நான் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்தானே?

காஞ்சி மகான் என்னை மும்முறை பார்த்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய் 
விடுமா என்ன? பெரியசாமி அன்று என்னைப் பார்த்தது, சின்னசாமியை இன்று 
நேரத்திற்கு உதவ வைத்து, எங்கள் குடும்ப வேரைக் கருகாமல் அல்லவா 
காத்தது?

ஆக, முதல் முறை பார்த்தது ‘வாழ்க்கைக் கடலைத் தைரியத்துடன் அணுகி, 
கடக்க உதவி செய்தது, செய்கிறது, இனிச் செய்ய உதவும்’.

இரண்டாவது முறை பார்த்தது ‘தீவிரமான நோயினால் சாவின் விளிம்புக்கு 
போன என்னை மீட்டு வர உதவியது’.

மூன்றாவது முறை பார்த்தது எனக்கு எப்படி உதவியது என்பதை நேரம் 
வரும்போது, காஞ்சித் தலைவர் அவர்களின் அருளால் எழுதுகிறேன்.

-தொடரும்




Episode 5




அட்சய த்ருதியை அன்று நாம் செய்வது என்ன? அன்றைக்கு மட்டும் 

அதிகாலையில் திறக்கும் நகைக்கடைகள் ஒன்றில் புகுந்து, குந்துமணி தங்கம் 

வாங்க எவ்வளவு பரபரப்போம்? ஆனால், இதற்கான ஆதாரம் நம் 

புராணங்களில், இதிகாசங்களில் இல்லவே இல்லை என்பது எத்துணை 

பேருக்குத் தெரியும்?



இன்றைய தினத்தில் இறைவனை வேண்டிக் கொண்டு, நம்மால் முடிந்தவரை 

இயலாதோர்க்குத் தானம் செய்வது சிறந்தது. ஒன்றுமே முடியாதவர்கள் ‘தயிர் 

சாத’த்தை வீட்டில் செய்து, ஆலயங்களில் அன்னதானமாய்ச் செய்வது 

கூடுதல் சிறப்பு.



இதையே கொஞ்சம் விரிவாக்கி, காஞ்சித் தலைவர் அவர்களின் அருள் 

மாரியை, அவர் அருளாலே மற்றவர்களுக்குத் தானம் செய்தால் எவ்வளவு 

பேருக்கு நன்மை பயக்கும்? எங்கள் குடும்பத்தினருக்குப் பொழிந்த / பொழிந்து 

கொண்டிருக்கிற அருள் மழையின் ஒரு துளியை இந்நன்னாளில் பார்ப்போம்.



மத்திய சர்க்காரில் பணிபுரியும் சராசரி மத்திய வர்க்கப் பிரஜை என என் 

தந்தையைப் பற்றி எழுதியிருந்தேன்.



தேனாம்பேட்டையில் அலுவலகம், திரு அல்லிக்கேணி பெரிய தெருவில் 

வீடு, பெரிய தெரு பிள்ளையார் ஆலயம், திரு அல்லிக்கேணி பார்த்தசாரதிப் 

பெருமாள், காஞ்சி மகா பெரியவர் என அவர் உலகம் மிகவும் சுருக்கமாய் 

இருந்தது.



வீட்டில் அவ்வளவாகப் பேச மாட்டார். அப்படியே பேசினாலும் ‘அதை எடு, 

இதை..இதைத்தான் சொன்னேன்’, ’வந்து’, ‘போயி’, கலந்து இருக்கும். எதிரில் 

இருக்கும் பொருளின் பெயரைச் சமயத்தில் சொல்லத் தெரியாமல் ‘இது…’என 

இழுத்து அவதிப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.



எழுபதுகளின் முடிவில்…



ஒரு இரவில் என் தந்தைக்கு வந்த கனவு அவர் வாழ்வை மாற்றியமைத்தது.

’நீ ஏன் ஆன்மீக உபன்யாஸங்கள் செய்யக்கூடாது?’ என்று காஞ்சி மகா 

ஸ்வாமிகள் கனவில் புன்னகையுடன் கேட்க, என் தந்தையோ வெலவெலத்து. 

‘எனக்கு ஆஃபீஸ் தவிர எதுவும் தெரியாதே? நான் எப்படி?’ என்று கேட்பதற்குள் 

கனவு கலைந்து விட்டது.


அடுத்த நாள் காலையில் உடனே காஞ்சிபுரத்துக்கு ஓட்டம் எடுத்த என் 

பெற்றோர், காஞ்சி மஹா பெரியவர் அவர்களை வணங்கி, தரிசித்துக் கனவை 

விவரித்தனர்.


இரண்டு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்து, ‘நான் கனவில் சொன்னபடி 

உபன்யாஸம் பண்ணு, நன்னா வரும். ஜமாய்ப்பே. உனக்கு ஒரு குறையும் 

வராது’ என்று உரைத்த நடமாடும் தெய்வத்தை மனதார வணங்கி 

நெகிழ்ச்சியுடன் புறப்பட்டனர் என் பெற்றோர்.



‘அதெப்படிம்மா அவ்ளோ வயசானப்புறம் எல்லாத்தையும் மனப்பாடம் செய்ய 

முடிஞ்சுது? அதுக்கும் மேலே எப்படி அதை மறக்காம உபன்யாஸம் செய்ய 

முடிஞ்சுது?’ என்று அம்மாவிடம் கேட்டேன்.


‘அது காஞ்சி மகா ஸ்வாமிகள் மேல உங்க அப்பாவுக்கு இருந்த அளவு கடந்த 

பக்தியேதான் காரணம். ராமாயணம், பாகவதம், ஸ்ரீமந்நாராயணீயம், 

திருப்பாவை, தேவி மஹாத்மியம்-னு அவர் படிச்சதெல்லாம் மனசுல 

பதிஞ்சுது அந்த நடமாடும் தெய்வத்தோட அருள்தான்.



’மேடைல உட்கார்ந்துண்டு எவ்வளவு தைரியமா சொல்றேளே?’ உங்க அப்பா 

கிட்டயே நான் ஒரு நாள் கேட்டேன்.


அதுக்கு அவர், ‘எவ்வளவுதான் ப்ரிப்பேர் பண்ணாலும், மேடைல 

உட்கார்ந்தவுடன் மனசார காஞ்சி மஹா பெரியவரைத் தியானம் 

பண்ணுவேன். 



அவாளே உடம்புல புகுந்த மாதிரி இருக்கும். அப்புறம் என்ன? பயமே இல்லாம 

சரளமா ஆன்மீகம் முழுவதும் கலந்து உபன்யாஸ மழையாப் பொழியும். ஆக, 

அவர்தான் நான் உபன்யாஸம் பண்றதுக்கும் காரணம்’னு சொன்னா’



இவ்வளவு மழை மேடையில் பொழிந்தாலும், ‘ப்ரம்மஸ்ரீ ஆங்கரை ஆர். 

கோதண்டராமன்’ என்று அழைக்கப்பட்டாலும், ’சேங்காலிபுரம் அனந்தராம 

தீக்ஷிதர்’ சாயல் இருக்கிறது என்று பேசப்பட்டாலும், மேடையை விட்டு 

இறங்கியவுடன் ‘இது, அது’ பாஷைதான்.



இது அவருக்கு ஆச்சரியம் இல்லை. ஏனெனில், ‘தான் ஜகத்குருவால் 

இயக்கப்படுகிறோம்’ என்கிற உணர்வு அவரிடம் கூடவே இருந்து 

கொண்டேயிருந்தது. ஆனால், கூட இருந்த எங்களுக்குப் படு ஆச்சரியம்.



இன்று அவரது நினைவாக அவருடைய உபன்யாஸங்களின் குரல் பதிவுகள் 

எங்களிடம் இல்லை. ஆனால், நாங்கள் இதை வருத்தமாய் எடுத்துக் 

கொள்ளவில்லை.



குரு-சீடன் என்கிற உறவு மிகவும் புனிதமானது. குருவின் கட்டளையை 

ஏற்றுக் கொண்டு அதை உடனே முடிப்பவன் உயரிய சீடன் என்று ஸாயி சத் 

சரித்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.



காஞ்சிப் பெரியவர் எனும் மகா குரு அவர்களுக்கு அத்தகைய உயரிய 

சீடர்களில் ஒருவராய் என் தந்தை இருந்து, அவர் இட்ட கடினமான பணியை, 

அவர் அருளாலேயே சுலபமாக்கிக் கொண்டு செய்து முடித்திருக்கிறார் 

என்கிற பெருமையும் / படிப்பினையுமே எங்களுக்குப் போதுமானது.



இதைத்தான் உங்களுக்கும் ‘அட்சய திரிதியை’யில் தானமாய்த் தர 

விரும்புகிறேன்.



அது சரி, என் தந்தையை உபன்யாஸத்தில் ஈடுபட வைத்ததோடு 

திருப்தியடைந்தாரா நம் காஞ்சித் தலைவர்?



-தொடரும்

No comments:

Post a Comment